தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு, தி.மு.க.வின் உள்கட்சி அரசியலை உரசிப் பார்த்திருக்கிறது.
கலைஞர் மீது கொண்டுள்ள காதலால், "கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. இதன் வெளியீட்டு விழா, கடந்த 24-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.
புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில் ரஜினி பேசும் போது, தி.மு.க.வில் சீனியர் அமைச்சர்களை ஸ்டாலின் கையாளும் விதம், கலைஞரின் ஆளுமை, நூலாசிரியர் எ.வ.வேலுவின் பெருமை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார்.
தனது பேச்சைத் துவக்கிய ரஜினி, "கலைஞரின் நூற்றாண்டு விழாவை, எந்த ஒரு தலைவரை யும் கொண்டாட முடியாத அளவிற்கு கொண்டாடி யிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்திற்கு கிடைத்த வெற்றி இது.
ஒரு ஸ்கூலில் டீச்சராக இருப்பவர், புதிய மாணவர்களை சாதாரணமாக சமாளித்துவிடுவார். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டம். இங்கு (தி.மு.க.வில்) ஏராளமான பழைய ஸ்டூடண்ட்ஸ் இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பழைய ஸ்டூடண்ட்ஸ் கிடையாது; அசாத்தியமானவர்கள். ரேங்க் மேலே ரேங்க் வாங்கிக்கொண்டு க்ளாஸை விட்டுப் போகாமல் உட்கார்ந்திருப்பவர்கள்.
துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு. கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டி யவர். அவரிடம் ஏதேனும் சொன்னால், ரொம்ப சந்தோஷம் என்பார். நன்றாக இருப்பதாக, சந்தோஷம்னு சொல்றாரா? நல்லா இல்லை என்பதற்காக சொல்றாரா? எதுவுமே புரியாது. இவர்களை எல்லாம் டீல் செய்யும் ஸ்டாலின் சார், ஹேட்ஸ் ஆஃப் டூ யூ''” என்று சொல்ல, மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். ரஜினியின் பேச்சை ஆமோதிப்பது போல அவரைப் பார்த்து வணக்கம் சொன்னார் மு.க.ஸ்டாலின்.
ரஜினியின் பேச்சில் அரங்கமே கலகலத்தா லும் துரைமுருகன் அதனை ரசிக்கவில்லை. இறுக்கமாகவே இருந்தார். அந்த இறுக்கம் சீனியர் அமைச்சர்களிடமும் இருந்தது. கலகலப்புக்கு மத்தியில் தொடர்ந்து பேசிய ரஜினி, ‘"கலைஞரை போல விமர்சனங்களையும் சோதனைகளையும் சந் தித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. இருந்திருந் தால் காணாமல் போயிருப்பார்கள். விமர்சனங்கள் மழை மாதிரி இருக்கவேண்டும்; புயல்போல இருக் கக்கூடாது. புயல் அடித்தால் மரங்களே சாய்ந்து விடும். ஆனா, கலைஞர் ஒரு ஆலமரம். உடன் பிறப்புகளாகிய வேர்கள் மிக ஸ்ட்ராங்கானது.
கலைஞர் உருவாக்கிய உங்களை யாரும் அசைக்க முடியாது. இல்லையெனில், 13 வருசம் ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியை காப்பாத்த முடியுமா? அஞ்சு வருசம் ஆட்சியில் இல்லாமல் போனால் கட்சியை நடத்தவே திண்டாடுகிறார்கள். முரசொலி மாறன் அப்பல்லோவில் அட்மிட்டான போதும், ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோதும் கலைஞர் சோகமாக இருந்ததைப் பார்த்திருக் கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என் கையைப் பிடித்துக்கொண்டு ஆறுதல் சொன்னவர் கலைஞர். எனது வாழ்வில் கலைஞரின் கண்ணீரை மறக்கவே முடியாது.
இந்த விழாவின் நாயகரான வேலுவை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. "லால்சலாம்' படத்தின் ஷூட்டிங்கிறாக திருவண்ணாமலைக்குச் சென்றி ருந்தபோது, அவரது காலேஜ் ஹெஸ்ட் ஹவுசில் தங்கினேன். கலைஞர் வந்தால் தங்கும் ஹெஸ்ட் அவுஸ் அது. அங்கிருந்த வரையில் என்ன பிள்ளை மாதிரி பார்த்துக்கொண்டவர் எ.வ.வேலு. வேலுவின் மகன் என்னோடே இருந்து கவனித்துக்கொண்டார்'' என்றார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ’"புத்தகத்தின் தலைப்பை பாருங்கள்; கலைஞர் எனும் தாய். தலைப்பிலேயே மொத்தமும் அடங்கி விட்டது. தாய் காவியத்தை எழுதிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டியிருக்கிறார் சகோதரர் வேலு. எனக்கு மட்டுமல்ல, வேலுவை போன்று லட்சோப லட்சம் உடன்பிறப்புகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்தவர் கலைஞர். எதிலும் வல்லவர் என்று வேலுவை கலைஞர் பாராட்டுவார். கலைஞரிடம் அப்படி பெயர் வாங்குவது சாதாரண விசயமல்ல. அவரிடம் பழகிய அத்தனை பேருக்கும் இது தெரியும். அதுவும் சீனியர் துரைமுருகனுக்கு நன்றாகவே தெரியும்.
எதிலும் வல்லவரான வேலு எழுத்திலும் வல்லவராக இருக்கிறார் என்பதை இந்த புத்தகம் நிரூபிக்கிறது. திருக்குறளையும் கலைஞரையும் இணைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். நூலிலுள்ள ஒவ்வொரு தலைப்பும் தனியாக ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கிறது. மிசா காலத்தில் நான் தாக்கப்பட்ட காட்சிகளும் இந்த புத்தகத்தில் வருகிறது.
அந்த காலகட்டத்தில் கலைஞர் எப்படி செயல்பட்டார் என வேலுவின் சொற்களில் படிக்கும்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். சோதனை எனும் நெருப்பில் புடம் போட்ட தங்கமாக விளங்கும் வரலாற்றுக்கு உரிமை படைத்த தி.மு.க. என்கிற வரிகளைப் படிக்கும் போது இந்த இயக்கத்தின் தலைவன் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன்''’என்றார்.
தி.மு.க.வின் சீனியர்களை குறிப்பாக துரைமுரு கனை பற்றி ரஜினி பேசியது குறித்து ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அரங்கத்தில் நிறைந்தவர்களிடம் இருந்தது.
அந்த வகையில் ரஜினியின் பேச்சு குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு போல ரஜினி மனம் திறந்து என்னை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார், அறிவுரை களை வழங்கினார். அவர் சொன்ன அத்தனையை யும் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம், எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்... எதிலும் தவறிவிட மாட்டேன். அவருக்கு நன்றி''’என்று சொன்னபோது அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந் தது. ஏற்புரை நிகழ்த்திய அமைச்சர் எ.வ.வேலு, "இந்த புத்தகத்தை எழுத எனக்கு உந்துசக்தியாக இருந்தது கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலின் முதல் பாகத்தின் 581ஆம் பக்கத்தில் கலைஞர் குறிப்பிட்ட ஒரு சம்பவம்தான்.
ஒரு காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியங்கள்தான். ஒரு பகுத்தறிவாளன் இப்படி பக்தி இலக்கியம் பற்றி பேசுகிறானே என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், திராவிடம் தமிழை வளர்த்திருந்தாலும் தமிழை வளர்த்த பெருமை பக்தி இலக்கியத்திற்கு உண்டு. கலைஞ ரின் வாழ்க்கை வரலாறு, செயல்பாடுகள் வங்காள விரிகுடா போன்றது. ஆனால் எனக்கோ ஒரு வாளி தண்ணீர்தான் கிடைத்தது. அதனை உங்களுக்குத் தந்திருக்கிறேன். நிறைவிருந்தால் போற்றுங்கள்; குறையிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்'' என்றார் எ.வ.வேலு.
கலகலப்பாகவும் கலைஞரின் ஆளுமையை பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்து முடிந்திருந்தாலும், ரஜினி வீசிய குண்டுதான் சர்ச்சைகளை எழுப்பி யிருக்கிறது. குறிப்பாக, தி.மு.க.வில் ஜூனியர்களுக்கு வழிவிடாமல் சீனியர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள் என்று உள்கட்சி அரசியலை அவர் விமர்சித் திருப்பதை துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலை வர்கள் யாரும் ரசிக்கவில்லை.
விழா முடிந்ததும் வேலூருக்கு கிளம்பிய துரைமுருகன் கடுகடுப்பாகவே இருந்தார். காரில் செல்லும்போது அவருக்கு தொடர்ச்சியாக பல ஃபோன்கள் வந்துள்ளன. அப்போது அந்த போன் கால்களுக்கு பதில் சொன்ன துரைமுருகன், ‘"தி.மு.க.வை பத்தி ரஜினிக்கு என்ன தெரியும்? என் னையும் சீனியர்களையும் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் எதற்காக இப்படி பேசினார்? யார் சொல்லி பேசினார்? என்றெல்லாம் எனக்குத் தெரியும். இதற்காகவெல்லாம் அசர மாட்டேன்.
ரஜினி இப்படி பேசினார்ன்னா, அதை ஆமோதிப்பது போல தலைவரும் (ஸ்டாலின்) பேசியதுதான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. கட்சியின் உள்விவகாரங்களை ஒரு நடிகர் விமர்சிக்கிறார் என்றால் அதனை தலைவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? கலைஞர் இருந்தால் இப்படி பேச நடிகரால் முடியுமா? ரஜினியை பேச விட்டுவிட்டீர்கள். இனி இன்னொரு மேடையில் இன்னொரு நடிகர் தி.மு.க. உள்விவகாரங்களை பேசு வார். இது கட்சிக்கு நல்லதா?'' என்று ஏகத்துக்கும் கோபத்தைக் கொட்டியிருக்கிறார் துரைமுருகன்.
இந்த நிலையில்தான் வேலுர் சென்ற துரைமுருகனிடம், ரஜினியின் விமர்சனம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "சினிமாவில் மூத்த வயதான நடிகர்கள், பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை''’என்று சினிமாவில் ரஜினியை பழைய மாணவர் என்கிற ரீதியில் பதிலடி தந்திருக்கிறார்.
ரஜினியை அவர் இப்படி கலாய்த்த விமர் சனம் தி.மு.க.வை கடந்தும் சினிமாத் துறையில் ரசிக் கப்பட்டிருக்கிறது. அதேசமயம், துரைமுருகனின் பேச்சை அறிந்த ஸ்டாலின் கோபப்பட்டிருக்கிறார். ஜெகத்ரட்சகனிடம் சொல்லி வருத்தப்பட்ட ஸ்டா லின், துரைமுருகனை தொடர்புகொண்டு, "நம் முடைய விழாவுக்கு வந்த கெஸ்ட்டை (ரஜினி) இப்படித்தான் மோசமாக விமர்சிப்பீர்களா, அண்ணே?''’என்று கடிந்துகொள்ள, ’"ஏதோ உணர்ச்சி வயப்பட்டு விட்டேன். ரஜினியிடம் நான் பேசு கிறேன்''’என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.
இதற்கிடையே, "நகைச்சுவையாகப் பேசினேன். அதை பகைச்சுவையாகப் பார்க்காதீர்கள். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள்'' என்று துரைமுருகனும், "அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் பேசியதில் எனக்கு வருத்தமில்லை'' என்று ரஜினியும் சொல்லியிருப்பது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பத்த வச்சிட்டியே பரட்ட!